ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை - வேதாந்தா வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை - வேதாந்தா வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Aug 2020 11:25 PM GMT (Updated: 18 Aug 2020 11:25 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும், அந்த ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது செல்லும் என்றும் தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு, வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்தது.


சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற தாமிர உருக்கு ஆலையை தொடங்க வேதாந்தா நிறுவனத்துக்கு கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அங்கிருந்து வெளியேறும் நச்சு புகையால் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தும் என்று கூறி, இந்த ஆலைக்கு அனுமதி வழங்கிய நாள்முதல் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆரம்பம் முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வந்தார். இதற்காக பசுமை தீர்ப்பாயம், ஐகோர்ட்டு மதுரை கிளை, சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அவரே நேரில் ஆஜராகி வாதிட்டார். இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் பலருக்கு புற்றுநோய் வந்ததால், அதற்கு காரணம் ஸ்டெர்லைட் ஆலைதான் என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து காட்டுத்தீ போன்று பரவியது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி பொதுமக்கள் ஊர்வலமாக சென்ற போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 வயது மாணவி உள்பட 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக ஸ்டெர்லைட் ஆலை, அதே ஆண்டு மே 28-ந்தேதி ‘சீல்’ வைத்து இழுத்து மூடப்பட்டது. பின்னர், இந்த ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அதே நேரம் இந்த ஆலையை நிரந்தரமாக மூடியது சரிதான் என்றும், இந்த ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரித்தும், எனவே ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும், அரசு முடிவை உறுதி செய்யவேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வக்கீல் அரிராகவன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் விசாரிக்க நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உருவாக்கி உத்தரவிட்டார்.

பல மாதங்கள் இந்த வழக்குகளை இந்த சிறப்பு அமர்வு நீதிபதிகள் விசாரித்தனர். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், டெல்லி மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அப்துல் சலீம், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதேபோல் மனுதாரர் வைகோ அவரே ஆஜராகி வாதிட்டார்.

மனுதாரர்கள் பேராசிரியர் பாத்திமா உள்ளிட்டோருக்காக மூத்த வக்கீல் வைகை, வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன், அ.சுரேஷ் சக்திமுருகன், ஜிம்ராஜ் மில்டன் உள்பட பலர் வாதிட்டனர். இவர்களது வாதம் 42 நாட்கள் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி 8-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று காலை 10.35 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக பிறப்பித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும், அந்த ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 12.4.2018 அன்று உத்தரவிட்டு உள்ளது. இதேபோல், காற்று மற்றும் நீர்ச் சட்டத்தின் கீழ் ஆலையை மூடுமாறு கோரியும், உரிமத்தை புதுப்பிக்கவும் மறுத்து மற்றொரு உத்தரவை 9.4.2018 அன்று பிறப்பித்து உள்ளது. 23.5.2020 அன்று ஆலையை மூடவும், அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்கவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த உத்தரவுகளை எல்லாம் எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகள் அனைத்தும் செல்லும் என்று அறிவிக்கின்றோம். அந்த உத்தரவுகளை உறுதி செய்கின்றோம்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடி தமிழக அரசு கடந்த 28.5.2018 அன்று பிறப்பித்த அரசாணை, ஆலைக்கு எதிராக பாய்லர்ஸ் பிரிவு இயக்குனர் 30.5.2018 அன்று பிறப்பித்த உத்தரவு, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரப்பிரிவு இணை இயக்குனர் 30.5.2018 அன்று பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டி.ஜி.பி. உத்தரவு ஆகியவை சட்டப்படி செல்லும். இந்த உத்தரவுகளை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 28.5.2018 அன்று சீல் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்கிறோம். வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை ஏற்றுக்கொள்கிறோம்.

பேராசிரியர் பாத்திமா தொடர்ந்த வழக்குக்கு மட்டும் தீர்ப்பு வழங்கவில்லை. ஏனெனில் அவர் ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள பாய்லர் உள்ளிட்ட ஆபத்தான சாதனங்களை எல்லாம் அகற்ற வேண்டும் என்றும் வழக்கில் கூறி இருந்தார். ஏற்கனவே, இதுதொடர்பான ஒரு வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.

அதனால், இந்த வழக்கையும் அந்த வழக்குடன் விசாரிக்க பரிந்துரைக்கிறோம். இதுகுறித்து நிர்வாக உத்தரவு பிறப்பிக்க இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு 815 பக்கங்களை கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம், “இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதால், அதற்கு வசதியாக இந்த தீர்ப்பை 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்கவேண்டும். இல்லை என்றால் ஆலை நிர்வாகத்துக்கு பாதிப்பு ஏற்படும்” என்றார்.

அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. “ஆலைக்கு எதிராக ஒன்றும் நடக்காது. ஏன் என்றால் இந்த தீர்ப்பை தொடர்ந்து ஆலையை அப்புறப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க போவது இல்லை. ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி ‘சிப்காட்’ நிறுவனம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் உள்ளது. சிப்காட் உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடையும் விதித்துள்ளது. அந்த தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது, இந்த தீர்ப்பை நிறுத்திவைக்க தேவையில்லை. நிறுத்திவைக்கவும் முடியாது” என்று கூறினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்ய உள்ளதால், மனுதாரர்கள் வைகோ, பேராசிரியர் பாத்திமா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளனர். அதாவது, தங்களது கருத்துகளை கேட்காமல், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்போவதாக அவர்கள் தரப்பு வக்கீல்கள் கூறினர்.

Next Story