305-வது பிறந்தநாள்: பூலித்தேவர் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை


305-வது பிறந்தநாள்: பூலித்தேவர் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 1 Sep 2020 9:00 PM GMT (Updated: 1 Sep 2020 8:50 PM GMT)

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவரின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 305-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவருடைய உருவப்படத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய வரலாறு, பல்வேறு முரண்பட்ட காரணங்களினாலே, வடக்கில் இருந்து எழுதப்பட்டாலும், தென்னகத்தின் விடுதலை வேட்கையையும் சுயாட்சிச் சரித்திரத்தையும் யாராலும் மறைத்திட முடியாது என்பதற்கு, மலையொத்த சான்றாக இருப்பவர் மாவீரர் பூலித்தேவர்.

நெல்லை மாவட்டம், நெற்கட்டும் செவலைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பண்டையப் பாளையக்காரரான மாவீரர் பூலித்தேவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கோ, அவர்களின் கைப்பாவைகளாகக் காலம் தள்ளியவர்களுக்கோ கடுகளவும் அஞ்சிடாமல் சுயாட்சி புரிந்தவர்.

ஒரு சிறிய நிலப்பகுதியை நிர்வகித்து, அதன் தனித்தன்மையைக் காப்பதற்காக, 12 ஆண்டுகள் ஆங்கிலேயர்களையும் அவர்களின் கூலிப்படையினரையும் எதிர்கொண்டு விரட்டிய சுயமரியாதை ஆட்சியாளர். பூலித்தேவரின் விடுதலை உணர்வையும், அவரது துணிவையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம். அந்த உணர்வினை நாமும் நிரம்பப் பெற்று இந்தியத் திருநாட்டைக் காத்திடுவோம். தமிழகத்தின் தன்மானச் சுடரொளியை உயர்த்திப் பிடித்திடுவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story