ஸ்டான்லி டாக்டர் மரணம் குறித்த வழக்கு; இணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு


ஸ்டான்லி டாக்டர் மரணம் குறித்த வழக்கு; இணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Sep 2020 10:16 PM GMT (Updated: 1 Sep 2020 10:16 PM GMT)

ஸ்டான்லி டாக்டர் மரணம் தொடர்பான வழக்கை கிழக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு பிரிவில் பயிற்சி டாக்டராக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் கண்ணனின் தந்தை முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “என் மகன் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததற்கான காயங்கள் உடலில் இல்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் செயல்பாட்டில் இல்லை. சாவில் பல்வேறு சந்தேகம் இருந்தும், ஏழுகிணறு போலீசார் வழக்கை முறையாக விசாரிக்காமல், தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று விசாரித்தார். பின்னர், “டாக்டர் மரணம் தொடர்பான வழக்கை கிழக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையிட வேண்டும். இந்த விசாரணையை 12 வாரத்துக்குள் முடித்து குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story