சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்


சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2020 11:07 AM IST (Updated: 13 Nov 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 காவலர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி இந்த கொலை வழக்கில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 போலீசார் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

Next Story