மதுரை துணிக்கடையில் தீவிபத்து: உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்
மதுரை துணிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
மதுரை மாநகர், மதுரை தெற்கு வட்டம், தல்லாகுளம், நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் 14-ந் தேதி காலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன் மற்றும் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன்.
கடமை ஆற்றும்போது ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன் மற்றும் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலா ரூ.25 லட்சம் நிதி
இதே பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் ஆர்.கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகிய இருவரும் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்துகொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி, அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும், தலா ரூ.15 லட்சம் அரசு நிதியில் இருந்தும், ஆக மொத்தம் தலா ரூ.25 லட்சமும்; அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் அரசு நிதியில் இருந்து வழங்கவும், அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட எதிர்பாரா தீ விபத்தில், துரதிர்ஷ்டவசமாக தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, விபத்தில் காயமடைந்தோர் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் உள்ளிட்டோர் தீயணைப்பு வீரர்கள் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story