விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் வெங்கையா நாயுடு பேச்சு


விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 19 Nov 2020 8:13 PM GMT (Updated: 19 Nov 2020 8:13 PM GMT)

விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று வெங்கையாநாயுடு பேசினார்.

சென்னை, 

தண்ணீர் சேமிப்பு உறுதிமொழி ஏற்பு தினத்தையொட்டி தண்ணீர் பாதுகாப்பு குறித்த காணொலி கருத்தரங்கு தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தண்ணீர் பாதுகாப்பு குறித்து, தேசிய அளவிலான பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்கும் தண்ணீர் வீரராகத் திகழ வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை பற்றிய நிலைமையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கு இதுவே உரிய தருணம். தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளை உடனடியாகவோ அல்லது எதிர்காலத்தில் உலகில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பாகவோ தொடங்க வேண்டும்.

பூமியில் கிடைக்கும் 3 சதவீத தூய்மையான தண்ணீரில் 0.5 சதவீதம் தான் குடிநீர் தேவைக்கு கிடைக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில், 18 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில், புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4 சதவீதம் மட்டுமே நாட்டில் கிடைக்கிறது.

உறுதிமொழி

விரைவான நகரமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் விரிவாக்கம் மற்றும் வேளாண் சாகுபடி பணிகள், சட்டவிரோத ஆழ்குழாய் கிணறுகள், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீரின் அவசியம் தெரியாமல் வீணடிப்பது போன்ற காரணங்களால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தியாவின் தண்ணீர் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில் நடப்பது நடக்கிறது என்ற மனப்பான்மையுடன் அமைதியாக இருந்து விட முடியாது. இந்த நிலை மாற, மேலும் பல உறுதிமொழிகள் ஏற்க வேண்டியிருக்கும்.

குளம், குட்டை, ஆறுகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பைகள், சலவை சோப்புகள், மனிதக் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை கலக்காமல் பேணிக் காக்க வேண்டும். பொருளாதார ரீதியாக சாத்தியமான பாசன முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.

ஊக்குவிக்க வேண்டும்

அரசின் தண்ணீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு, ஒவ்வொரு குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும், விவசாயிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளும் துணை நிற்பதோடு, அரசு சாரா அமைப்புகளும் இதனை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வுகாண, விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் முன்வர வேண்டும். கங்கை புனரமைப்புத் திட்டம், நாட்டின் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பிரதமரின் கிரிஷி சிஞ்சாய் திட்டம், அடல் பூஜல் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஜல் சக்தி அபியான் போன்ற திட்டங்கள் பாராட்டுக்குரியவை.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கிஷோர் அஜ்வானி, செயல் ஆசிரியர் ஆனந்த் நரசிம்மன் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உள்பட பலரும் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Next Story