பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு உதவ வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்


பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு உதவ வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Nov 2020 11:45 AM GMT (Updated: 20 Nov 2020 11:45 AM GMT)

பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரை,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயம் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்தாண்டு தமிழக அரசின் உள்ஒதுக்கீடு காரணமாக, அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோரால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயத்தை ரத்து செய்து, குறைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.  

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது;-

“அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஆனால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பொருளாதார சூழல் காரணமாக கட்டணம் செலுத்த இயலாமல், மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை அளிக்கிறது.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 86 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப்பள்ளி மாணவரின் கட்டணத்தை ஏற்று கொண்டு உள்ளார். 

ஏழ்மை நிலையால் கட்டணம் செலுத்த இயலாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சினிமா நடிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏழை மருத்துவ மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்” என்று தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து, தனியார் கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர், செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story