“நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


“நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 7:41 AM GMT (Updated: 23 Nov 2020 7:41 AM GMT)

“நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும். நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் “நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 590 கி.மீட்டர், புதுச்சேரியில் இருந்து 550 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், வடமேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நிவர் புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Next Story