ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 வினியோகம் தொடங்கியது - மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்


ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 வினியோகம் தொடங்கியது - மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 4 Jan 2021 11:30 PM GMT (Updated: 4 Jan 2021 8:06 PM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ரொக்கப்பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

சென்னை, 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் மக்கள் கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 சேர்த்து வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பு திட்டத்தை கடந்த மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜனவரி 4-ந்தேதி (நேற்று) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் தொடங்கும் என்றும், இதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில நாட்களாக டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நடந்து வந்தது. பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறக்கூடிய பொருட்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை மூலம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் காலை, மாலை என தலா 100 பேர் வீதம் 2 ‘ஷிப்டு’களாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், முழு கரும்பு மற்றும் ரூ.2 ஆயிரத்து 500-ம் அடங்கிய பொங்கல் பரிசு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். பொதுமக்கள் காலை 8 மணி முதலே ஆர்வத்துடன் ரேஷன் கடை நோக்கி வர தொடங்கினர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். மேலும் ரேஷன் கடைகள் முன்பு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அப்பகுதி அ.தி.மு.க .வினர் செய்து தந்திருந்தனர்.

மேலும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் வரிசையில் நிற்காமல் பொருட்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர். அரசின் அறிவிப்புப்படி ரொக்கப்பணம் கவரில் இல்லாமல் கையிலேயே வழங்கப்பட்டது. மேலும் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என மக்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தினர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

ஒருகையில் கரும்பையும், இன்னொரு கையில் பொங்கல் பரிசு தொகுப்பையும் பெற்று மக்கள் உற்சாகமாக வீடுகளுக்கு சென்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொருட்களை பெற முடியாதவர்கள் வருகிற 19-ந்தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story