வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் ஊழல் குறையும்: குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்


வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் ஊழல் குறையும்: குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 9 Feb 2021 10:30 PM GMT (Updated: 9 Feb 2021 9:19 PM GMT)

அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் குடிமராமத்து திட்டப்பணி விவரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்புநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு ஊரகப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது போதுமான அளவு மழை பெய்தபோதும், தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம்.

எனவே தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்கள், அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

வெளிப்படைத்தன்மை

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குடிமராமத்து பணிகள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பார்க்க இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு நீதிபதிகள், குடிமராமத்து பணிகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என தெரிவித்தனர்.

இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அரசு திட்டப்பணிகளில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் ஊழல் குறையும். குடிமராமத்து பணி என்பது ரகசியமாக நடத்தப்படும் பணி இல்லை. எனவே குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

இதற்காக இணையதளம் தொடங்கி, அதில் குடிமராமத்து பணி நடக்கக்கூடிய இடம், பணியின் விவரம், கால அளவு, அதற்கான செலவுத்தொகை, முடிக்கப்பட்டு உள்ள பணிகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை 12 வாரத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.” என்று உத்தரவிட்டனர்.

Next Story