தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு


தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 10 Feb 2021 7:08 AM GMT (Updated: 10 Feb 2021 7:08 AM GMT)

அதிக வட்டிக்கு கடன் வழங்கி மிரட்டல் விடுத்தாக திருவையாறு காவல்நிலையத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

சீன செயலிகளை பயன்படுத்தி அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை எடுத்து மிரட்டியதாக, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி சென்னையில் 2 சீனர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த கும்பல், வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வழங்குவதாக கூறி, சீன செயலிகள் மூலம் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். இதில் கடனை திருப்பி செலுத்தாத நபர்களின் நண்பர்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர் குறித்து அவதூறாக பேசியுள்ளனர். 

இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவல்நிலையத்தில் இதே போன்று 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 செயலிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மற்றொரு செயலி டெல்லியில் இருந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இது குறித்து திருவையாறு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவல்நிலையத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்தல், கொலை மிரட்டல் விடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த 3 செயலிகள் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் ஏற்கனவே சீன செயலிகள் மூலம் மிரட்டல் விடுத்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தஞ்சாவூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள செயலிகளுக்கும் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீசார் இந்த வழக்கில் சென்னை போலீசின் உதவியை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story