ஓ.பி.சி. இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது ஈடு செய்ய முடியாத சமூக அநீதி - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Feb 2021 7:18 PM GMT (Updated: 24 Feb 2021 7:18 PM GMT)

ஓ.பி.சி. இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது ஈடு செய்ய முடியாத சமூக அநீதி என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஓ.பி.சி. இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது ஈடு செய்ய முடியாத சமூக அநீதி என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய தேசிய தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிவிக்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், அதனால் அமைக்கப்பட்ட குழுவும் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில். மீண்டும் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிக்கையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மற்றும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பிலான அத்தியாயத்தில்,‘‘ மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும்’’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான ஓபிசி இட ஒதுக்கீட்டில் 27 சதவீத கூடுதல் இடங்களை ஏற்படுத்தி நடப்பாண்டு முதல் அனைத்து வகையான மருத்துவப் படிப்பு களிலும் 27சதவீத ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை; அவ்வாறு செய்யாததற்கான காரணம் என்ன? என் பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்த வழக்கிலும் 2021-ம் ஆண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அத்தகைய சூழலில் வரும் ஆண்டில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்திருப்பது சமூகநீதி சூறையாடல் ஆகும்.

மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 11 ஆயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் பறிக்கப்பட்டன. 2020-21 -ம் ஆண்டில் 3758 ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

2021-22-ம் ஆண்டிலும் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் 5 ஆயிரத்திற்கும் கூடுதலான ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழப்பர். இது ஈடு செய்ய முடியாத சமூக அநீதி. இந்த அநீதி தொடருவதை அனுமதிக்கக்கூடாது. அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.அதற்கான திருத்த அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்” என்று அதில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Next Story