ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு


ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 7:03 AM GMT (Updated: 27 Feb 2021 7:03 AM GMT)

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்கள் குறித்து விமர்சித்து பேசினார். இதுகுறித்து ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக புகார் அளித்து வருவதால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அவரது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தி தாமதமின்றி வழக்கை முடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story