தேர்தல் பறக்கும் படை சோதனையில் கமல்ஹாசன் படத்துடன் 3 மூட்டை பனியன் பறிமுதல்


தேர்தல் பறக்கும் படை சோதனையில் கமல்ஹாசன் படத்துடன் 3 மூட்டை பனியன் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2021 1:10 AM GMT (Updated: 1 March 2021 1:10 AM GMT)

கடலூர் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் கமல்ஹாசன் படத்துடன் 3 மூட்டைகளில் இருந்த பனியன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர், 

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதியை அறிவித்த உடனே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவை அமைத்து, மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.

பனியன், பாத்திரம்

அதன்படி இந்த குழுவினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். நேற்று பறக்கும் படையினர் கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினி லாரியை கண்காணிப்பு குழுவினர் மறித்து சோதனை செய்தனர். அதில், 3 மூட்டைகளில் பனியன்களும், மற்றொரு 3 மூட்டைகளில் சில்வர் பாத்திரமும் இருந்தன. பனியனின் முன்பக்கம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவமும், டார்ச் லைட் சின்னமும் இடம் பெற்றிருந்தது. பின் பக்கம் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சோமநாதன் என்பவரின் படமும், டார்ச் லைட் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தது.

பறிமுதல்

இதையடுத்து இதை ஏற்றி வந்த டிரைவரான லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரிடம் கண்காணிப்பு குழுவினர் விசாரித்த போது, அதை அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்கு ஏற்றி செல்வதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த குழுவினர், அதை கடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தான் இந்த பொருட்கள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story