பாலியல் புகார் கூறப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மீதான விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் நீதிபதி உத்தரவு


பாலியல் புகார் கூறப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மீதான விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 2 March 2021 3:54 AM GMT (Updated: 2 March 2021 3:54 AM GMT)

பாலியல் புகார் கூறப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி மீதான விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அந்த அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், புகாருக்கு உள்ளான அதிகாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவணங்கள் தாக்கல்

இதற்கிடையே, இந்த விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.

அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், ஐ.பி.எஸ் அதிகாரி மீதான எப்.ஐ.ஆர். உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

மேலும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் புகார் சி.பி.சி.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு புகார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளதாகவும். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யே விசாரணையை நேரடியாக கண்காணிப்பார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐகோர்ட்டு கண்காணிக்கும்

இதன்பின்பு நீதிபதி, புகாருக்கு உள்ளான ஐ.பி.எஸ். அதிகாரி மீதான விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஐ.பி.எஸ். பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என்று விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதன்பின்பு, இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

சூப்பிரண்டு மீதும் வழக்கு

பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து டி.ஜி.பி.யை சந்தித்து புகார் கொடுக்க சென்னைக்கு காரில் வந்தபோது, போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் வழிமறித்து தொல்லை கொடுத்ததாகவும், அவரது கார் சாவியை பிடுங்கி மிரட்டலில் ஈடுபட்டதாகவும், தகவல்கள் வெளியானது. அது தொடர்பாகவும் அந்த பெண் அதிகாரி தனது புகாரில் குறிப்பிட் டுள்ளார்.

அதன் அடிப்படையில் காரை மறித்த போலீஸ் சூப்பிரண்டு மீதும் சி.பி.சி.ஐ, டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

Next Story