இன்று உலக மகளிர் தினம்: பெண்கள் கூட்டுப் புழுவா? பட்டுப் பூச்சியா? கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள்


இன்று உலக மகளிர் தினம்: பெண்கள் கூட்டுப் புழுவா? பட்டுப் பூச்சியா? கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள்
x
தினத்தந்தி 7 March 2021 8:53 PM GMT (Updated: 7 March 2021 8:53 PM GMT)

உலக மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, கவிஞர் வைரமுத்து பெண்கள் கூட்டுப் புழுவா? பட்டுப் பூச்சியா? என்ற பாடலை எழுதி இருக்கிறார்.

சென்னை, 

கவிஞர் வைரமுத்து உலக மகளிர் தினத்தையொட்டியும், “நாட்படு தேறல்” பாட்டுத் தொகுப்புக்காகவும் ‘அச்சமே அகன்றுவிடு' என்ற பெண்ணுரிமை பாடலை எழுதி இருக்கிறார். அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு என்று ஆபரணமாக அணிவிக்கப்பட்ட இந்த 4 பண்புகளே பின்னாளின் பெண்களுக்கு விலங்குகள் ஆகிவிட்டன.

அதனை உடைத்து எறியும் வகையிலும், காதலுக்கு எதிராக ஆணவக் கொலை நிகழ்த்தப்படுமோ? என்று அச்சப்படும் ஒரு பெண் புரட்சிக்குரல் எழுப்புவதை போன்றும் கவிஞர் வைரமுத்து இந்த பாட்டை எழுதியுள்ளார்.

இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி ரம்யாவும் இந்த பாடலை இணைந்து பாடி இருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் வருமாறு:-

கூட்டுப் புழு, பட்டுப் பூச்சி

அச்சமே அகன்றுவிடு, மடமே மடிந்துவிடு, நாணமே நகர்ந்துவிடு, பயிர்ப்பே பறந்துவிடு. உடம்பு என்ன விறகா?- நான் உணர்ச்சி இழந்த சருகா?, காதல் சொல்வது தவறா?-நான் கல்லில் செய்த சுவரா?.

சாத்திரக் கைதியாகின்றேன், சாதி படைத்த சிறைகளிலே, மங்கையாக நான் ஏன் பிறந்தேன், மலையில் முட்டிய நதிபோலே, ஆப்பிரிக்கக் காட்டில்நான் அணிலாய்ப் பிறப்பேனோ?, அட்லாண்டிக் கடலோடு ஆராமீன் ஆவேனோ?

மலையாள மலையில்நான் மணிக்கிளியாய் மாறேனோ?, மனிதப் பிறவியற்று மனம்போல் வாழ்வேனோ?, கூட்டுப் புழுவாய் மரிப்பேனோ?-இல்லை பட்டுப் பூச்சியாய் பறப்பேனோ?

இவ்வாறாக அந்த பாடல் வரிகள் உள்ளன.

Next Story