‘சதுரங்க வேட்டை’ சினிமா பட பாணியில் ரூ.26 கோடி சுருட்டல்: இசை அமைப்பாளர் அம்ரிசின் மோசடி லீலை பற்றி பரபரப்பு தகவல்கள்


‘சதுரங்க வேட்டை’ சினிமா பட பாணியில் ரூ.26 கோடி சுருட்டல்: இசை அமைப்பாளர் அம்ரிசின் மோசடி லீலை பற்றி பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 17 March 2021 9:12 PM GMT (Updated: 17 March 2021 9:12 PM GMT)

இரிடியம் தருவதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்ததாக சினிமா இசை அமைப்பாளர் அம்ரிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ‘சதுரங்க வேட்டை’ சினிமா பட பாணியில் மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அம்ரிசின் கூட்டாளிகள் 6 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை, 

சினிமா இசை அமைப்பாளர் அம்ரிஸ், ரூ.26 கோடி மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சுமத்தப்பட் டுள்ளது.

அந்த சமயத்தில் அம்ரிஸ் சினிமாவில் பெரிய பிரபலம் ஆகவில்லை. அவரது தாயார் ஜெயசித்ரா பழம்பெரும் நடிகை ஆவார். அந்தப் பின்புலம் மட்டும்தான் அம்ரிசுக்கு இருந்தது. அப்போது நண்பர்களுடன் செய்த மோசடி விளையாட்டு, இப்போது பிரபலமான நிலையில் இருக்கும்போது, ஜெயில் வரை அவரை கொண்டுபோய் விட்டது.

வக்கீல் கொடுத்த புகார்

அம்ரிஸ் மீது புகார் கொடுத்துள்ள நெடுமாறன் (வயது 68) சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரில் வசிக்கிறார். வக்கீல் தொழில் செய்கிறார். வசதி படைத்த இவர், தனக்குச் சொந்தமான தோட்டம் ஒன்றை சினிமா படப்பிடிப்பு நடத்த வாடகைக்கு விடு வார். அந்த வகையில் நெடுமாறன் அம்ரிசுக்கு பழக்கமானார். அம்ரிஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து, இரிடியம் என்ற அதிர்ஷ்டப்பொருளை தருவதாக சொல்லி, நெடுமாறனிடம் ரூ.26 கோடி வரை பணம் வாங்கி உள்ளார். அந்தப் பணத்தை வக்கீல் நெடுமாறன் பெரும்பாலும் வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவே கொடுத்துள்ளார். அது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது.

தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டு பலமுறை அம்ரிசிடம் நெடுமாறன் பேசியதாக தெரிகிறது. பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக அம்ரிஸ் சொன்னதால், நெடுமாறனும் முதலில் போலீசுக்கு போகவில்லை. பணம் திருப்பிக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகுதான் அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய பணத்தில் ரூ.3 கோடி மட்டும் தனக்கு கிடைத்ததாக அம்ரிஸ் சொல்கிறார். மீதிப் பணத்தை அவரது நண்பர்கள் பங்குபோட்டுக் கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ பட பாணியில்...

‘சதுரங்க வேட்டை’ சினிமாவில் இதுபோல் இரிடியம் தருவதாக மோசடி செய்யும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தப் பட பாணியில் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அம்ரிசின் நண்பர்கள் 6 பேர் இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்ரிஸ் போலீஸ் காவலில் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் அசோகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மேனகா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

Next Story