சென்னை-மதுரை இடையே வரும் ஏப்ரல் 18 முதல் அதிவேக சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை-மதுரை இடையே வரும் ஏப்ரல் 18 முதல் அதிவேக சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 24 March 2021 8:21 AM GMT (Updated: 24 March 2021 8:21 AM GMT)

கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

 
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக ரயில்களின் இயக்கம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் முன்பதிவு அல்லாத டிக்கெட் பயணத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே இதுவரையில் ரெயில்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்க இருப்பதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரெயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. 18-ந் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு சூப்பர் பாஸ்ட் ரெயில் புறப்பட்டு காலை 8.10 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்கிறது.

Next Story