தேர்தல் பணியின் போது அரசு பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலி மேலும் 2 போலீசார் படுகாயம்


தேர்தல் பணியின் போது அரசு பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலி மேலும் 2 போலீசார் படுகாயம்
x
தினத்தந்தி 26 March 2021 10:20 PM GMT (Updated: 26 March 2021 10:20 PM GMT)

சிவகங்கை அருகே தேர்தல் பணியின் போது அரசு பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை, 

சிவகங்கை சட்டசபை தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு தாசில்தார் அசோக்குமார் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் (வயது 51), மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பாலசுப்பிரமணியன் (32), சந்தனகுமார் (30), காரல் மார்க்ஸ் (31) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

வாகன சோதனை

இந்த பறக்கும் படையினர் சிவகங்கை- இளையான்குடி சாலையில் ஊத்திகுளத்தை அடுத்த பூவாளி என்ற இடம் அருகே நேற்று காலை வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர்.

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சாலையில் நின்று அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

பஸ் மோதியது

அப்போது சிவகங்கையில் இருந்து தாயமங்கலத்துக்கு செல்வதற்காக அரசு பஸ் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த பஸ் திடீரென வாகன சோதனை செய்துகொண்டிருந்த போலீசார் மீது பயங்கரமாக மோதியது. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் உள்பட 4 போலீசாரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.சம்பவம் நடைபெற்ற உடன் அரசு பஸ் டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

பஸ்சுக்குள் இருந்த பயணிகளும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் பதறியபடி ஓடிவந்து 4 போலீசாரையும் மீட்டு உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர்-போலீஸ்காரர் பலி

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் மேல் சிகி்ச்சைக்காக ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பாலசுப்பிரமணியன், சந்தனகுமார் ஆகிய 2 பேரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் இறந்தார்.

சந்தனகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு போலீஸ்காரர் காரல்மார்க்சுக்கு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும் சோகம்

விபத்தில் பலியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன், போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் மானாமதுரை அடுத்த திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்தவர்கள். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணனுக்கு மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கர்ணன் சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

போலீஸ்காரர் பாலசுப்பிரமணியனுக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் அரசு பஸ் மோதி பலியான சம்பவம் சிவகங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story