மாநில செய்திகள்

வருமானவரி சோதனை எந்த சார்பும் இல்லாமல் நடக்கிறது: ‘எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது’ + "||" + The income tax audit is going on without any bias: ‘Looking at Edappadi Palanisamy, the DMK is not a party. Scared '

வருமானவரி சோதனை எந்த சார்பும் இல்லாமல் நடக்கிறது: ‘எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது’

வருமானவரி சோதனை எந்த சார்பும் இல்லாமல் நடக்கிறது: ‘எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது’
எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று ‘தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா கூறியுள்ளார்.
சென்னை, 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘தந்தி' தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அமித்ஷா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழக தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

பதில்:- தேர்தல் களம் எங்கள் கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

கேள்வி:- உங்களுக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு பற்றிச் சொல்லுங்கள்? இங்கே உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன?

பதில்:- இது பழமையான கலாசாரம் கொண்ட மாநிலம். நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரிய பங்காற்றியுள்ளது. தமிழ் மிக பழமையான மொழி. செம்மொழி.

கேள்வி:- இங்கே வரும்பொது கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றிருக்கிறீர்களா?

பதில்:- கற்றுக்கொள்ள ஆசைதான். நேரம் கிடைப்பதில்லை. ஆனால் நான் தமிழ் மொழியை மிகவும் மதிக்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சர்?

கேள்வி:- தமிழ்நாட்டில் இந்த முறை பா.ஜ.க. கால் பதித்துவிடுமா? பல வருடங்களாக முடியவில்லையே?

பதில்:- மத்தியில் 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம். ஆனால் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றுகூட இல்லை. ஒரு அணி (அ.தி.மு.க.-பா.ஜ.க.), வளர்ச்சியை மையப்படுத்தி, வெளிப்படையான ஆட்சி நடத்தியபிறகு மக்களைச் சந்திக்கிறது. மற்றொரு அணி (தி.மு.க.-காங்கிரஸ்), ஊழல் செய்த பணத்தை வைத்து, குடும்ப அரசியலை மையப்படுத்தி தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வாக்களிக்கவேண்டுமா என்று மக்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

கேள்வி:- தி.மு.க. ஜெயித்தால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்-அமைச்சர் என்கிறீர்களா?

பதில்:- இப்போது இல்லை. ஆனால் அவரை எதிர்காலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிதானே இது?

10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி

கேள்வி:- நாடு முழுவதும் உங்கள் கொடி பறக்கிறது. ஆனால் இங்கே...?

பதில்:- திரிபுராவில் எங்கள் கொடியே இல்லை. இப்போது எங்கள் ஆட்சி நடக்கிறது. மணிப்பூரிலும், அசாமிலும்கூட அப்படித்தான். அரசியலில் நாங்கள் கொள்கை மற்றும் நல்லாட்சியை ஆதாரமாக வைத்து வேலை செய்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் நல்ல வளர்ச்சி பெறும். போட்டியிடும் 20 தொகுதிகளில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிச்சயம் வெல்வோம்.

தி.மு.க. பயப்படுகிறது

கேள்வி :- தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாததால் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா ?

பதில்: அரசியலில் வெற்றிடம் என்றுமே இருக்காது. எந்த வெற்றிடமாக இருந்தாலும் அது தானாகவே நிரப்பப்படும். அப்படி எந்த வெற்றிடத்தையும் பயன்படுத்திக்கொள்ள நாங்கள் வரவில்லை. நாங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிற்கிறோம்.

கேள்வி:- வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார் என்கிறீர்களா?

பதில்:- வெற்றிடமே இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் ஆகிவிட்டாரே! விவசாயி மகன். தி.மு.க. அவரை கண்டு பயப்படுவதால்தான், அவருடைய அம்மாவைக்கூட தவறாக விமர்சிக்கிறார்கள். இதனால் அவரை மட்டுமல்ல, அனைத்து தமிழ் தாய்மார்களையும் தி.மு.க.வினர் அவமானப்படுத்தியுள்ளனர். இதேதான் ஜெயலலிதாவுக்கும் நடந்தது.

தி.மு.க.வின் எதிர்மறையான விளம்பரம்

கேள்வி: - அ.தி.மு.க.வுக்கு செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.வுக்கு போடும் ஓட்டு என்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். நீங்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறீர்கள் என்கிறார்களே?

பதில்:- தி.மு.க.வினர் செய்வது போன்று, எதிர்மறையான விளம்பரங்களை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. ஒரு கட்சி எதிர்மறை கருத்துகளையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறதென்றால், என்ன சொல்வது? உங்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்று சொல்லுங்களேன்? அடுத்தவருக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதை மட்டும் சொல்கிறீர்களே? நாங்கள் எங்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்று சொல்கிறோம். தி.மு.க.வுக்கு மக்கள் ஏன் ஓட்டுப்போடவேண்டும்? அதைச் சொல்லுங்கள். மற்றவருக்கு போடக்கூடாது என்பதை மட்டுமே சொல்லி மக்கள் ஆதரவைப் பெற முடியாது.

கேள்வி:- அப்படியானால் பா.ஜ.க. மறைமுகமாக அ.தி.மு.க.வை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறீர்களா?

பதில்:- நாங்கள் யாரையும் இயக்கவில்லை. எங்கள் சிறிய தோழமைக் கட்சிகளைக்கூட சமமான மரியாதையுடன் நடத்துகிறோம். அ.தி.மு.க. மிகப்பெரிய கட்சி. பாரம்பரியமான கட்சி. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட கட்சி. நாங்கள் நண்பர்கள். நண்பர்களாகவே தொடர்வோம்.

சசிகலா

கேள்வி:- சசிகலாவை கூட்டணியில் இணைக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையா?

பதில்:- நான் அப்படிச் சொல்வதற்கு அது என்னுடைய வரம்புக்கு உட்பட்ட விஷயமே இல்லையே?

வருமானவரி சோதனை

கேள்வி:- தேர்தல் நேரத்தில் நடக்கும் வருமானவரி சோதனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே?

பதில்:- இதற்கு எதிர்க்கட்சிகள் சந்தோஷப்படவேண்டும். அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்துள்ளன. வருமானவரி சோதனை எந்தச் சார்பும் இல்லாமல் நடக்கிறது. இப்படி தோல்விக்கான காரணங்களைத் தேடி அவர்கள் இப்போதே சொல்லிவிடக் கூடாது. தேர்தலில் தோற்றபிறகு சொல்லட்டும்.

கேள்வி:- உங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்?

பதில்:- நான் தமிழகத்தில் சில இடங்களுக்குச் சென்றுள்ளேன். அதை வைத்துப் பார்க்கும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்

கேள்வி:- புதுச்சேரியில்நீங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்துவிட்டீர்கள், ஜனநாயக முறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்:- புதுச்சேரி அரசு கவிழ்ந்தபிறகு, நாங்கள் அங்கே ஆட்சி அமைக்கவில்லையே?

கேள்வி:- தேர்தல் நேரத்தில் தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில்:- தமிழகத்துக்கு பா.ஜ.க. நிறைய திட்டங்களை செய்துள்ளது. துறைமுகங்களை மேம்படுத்தும் சாகர் மாலா திட்டத்துக்கு மட்டும் 2.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். நாடு முழுவதும் 13 கோடி இலவச சிலிண்டர்கள் வழங்கியுள்ளோம். அதில் அதிகம் பயன்பெற்றது தமிழகம். ராகுல் காந்தி இங்கு வரும்போது, அவர்கள் ஆட்சியில் தமிழகத்துக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்லட்டும். சிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்தவர்தானே? நிதி மந்திரியாக என்ன செய்தார்? தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரோ தங்கள் பிள்ளைகளை வளர்த்துவிடத்தான் உழைக்கிறார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய, எங்கள் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வாக்களித்து, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கச் செய்யவேண்டும்.

இவ்வாறு அமித்ஷா பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேவையுள்ள இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
தேவையுள்ள இடங்களை கண்டறிந்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
2. எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் ப.சிதம்பரம் பேட்டி
எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் என ப.சிதம்பரம் கூறினார்.
3. மேற்கு வங்க தேர்தல் தோல்வியால் அமித்ஷா பதவி விலகவேண்டும்; தேசியவாத காங்கிரஸ்
மேற்கு வங்க தேர்தல் தோல்வியால் அடுத்து அமித்ஷா பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
4. விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தார். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
5. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.