தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது சென்னையில் 1,500 பேருக்கு தொற்று


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது சென்னையில் 1,500 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 April 2021 3:03 AM GMT (Updated: 8 April 2021 3:03 AM GMT)

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டுகிறது. சென்னையில் 1,500 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 2-வது அலை உருவாகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

சென்னை, 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி, முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதியே ஊடுருவியது. ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த 45 வயது நபருக்கு முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் வாரத்தில் இருவர், 3 பேர் என பாதிப்பு அறியப்பட்டு வந்த நிலையில், நாள் ஒன்றுக்கு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது.

இருந்தபோதிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. ஜூலை மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர்.

படிப்படியாக குறைந்தது

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி மதுரையை சேர்ந்த 54 வயது நபர் கொரோனாவுக்கு பலியானார். ஜூன் மாத இறுதியில் தமிழகத்தில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவின் கோரப்பிடிக்கு பலியாகினர். தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா உயிரிழப்பு, அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி 127 பேராக உயர்ந்தது.

கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை கட்டுப்படுத்தும் திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைய தொடங்கியது. அதுமுதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும், கொரோனா தாக்குதலால் உயிரிழப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு 438 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியது.

மீண்டும் அதிகரிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இதில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் மட்டும், தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

2-வது அலை உருவாகும் அச்சம்

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 2-வது அலை உருவாகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

4 ஆயிரத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் நேற்று புதிதாக 80 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2,391 ஆண்கள், 1,595 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 116 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 678 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேரும், செங்கல்பட்டில் 390 பேரும், கோவையில் 332 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 11 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 98 லட்சத்து 45 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 11 ஆயிரத்து 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 952 ஆண்களும், 3 லட்சத்து 61 ஆயிரத்து 122 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 33 ஆயிரத்து 210 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 26 ஆயிரத்து 006 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 9 பேரும் என 17 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டில் இருவரும், கோவை, மதுரை, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 821 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,824 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,824 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 556 பேரும், செங்கல்பட்டில் 216 பேரும், கோவையில் 150 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 70 ஆயிரத்து 546 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 27 ஆயிரத்து 743 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story