ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத 113 பயணிகள் மீது நடவடிக்கை


ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத 113 பயணிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 8 April 2021 4:07 AM GMT (Updated: 8 April 2021 4:07 AM GMT)

ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத 113 பயணிகள் மீது நடவடிக்கை.

சென்னை, 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஜனவரி மாதம் வரை குறைந்துகொண்டு வந்து கொரோனா பரவல், பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி, முககவசம் மற்றும் சமூக இடைவெளிதான் வழி என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பொதுமக்கள் பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. அதிலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை.

இந்தநிலையில், முககவசம் அணிவதை கண்காணிக்கும் நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். முககவசம் அணியாமல் வரும் பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

சென்னை ரெயில்வே கோட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் முககவசம் அணியாத பயணிகள் 80 பேருக்கு அபராதம், 33 பேர் மீது ரெயில்வே விதி 145 ‘பி’ படி வழக்கு என மொத்தம் 113 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து ரெயில் நிலையங்களிலும், முககவசம் அணிய பயணிகளிடம் கலை நிகழ்ச்சிகள் மூலம் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத பயணிகளுக்கு உடனடி அபராதம் விதிக்க ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அதிகாரம் வழங்கினால், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story