கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கம்; மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு


கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கம்; மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 11:28 PM GMT (Updated: 9 April 2021 11:28 PM GMT)

கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் சென்னையில் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அதில், இன்று (சனிக்கிழமை) முதல் பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணிக்க கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அரசு சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 300 முதல் 400 பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துகின்ற வகையில், தமிழக அரசு கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்ற பஸ்களில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தது.

கூடுதலாக 400 பஸ்கள்

ஆனால், தற்போது தமிழக அரசால் பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, 10-ந்தேதி (இன்று) முதல், 300 முதல் 400 பஸ்கள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன.குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Next Story