வாக்கு எண்ணிக்கையின்போது அமல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன? தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


வாக்கு எண்ணிக்கையின்போது அமல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன? தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 21 April 2021 9:47 PM GMT (Updated: 21 April 2021 9:47 PM GMT)

கொரோனா அதிகம் பரவும் காலகட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது அமல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறவுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பரவலும் அதிகரித்தபடி உள்ளது.

எனவே வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அடிக்கடி அறிவுரைகளை வழங்கி வருகிறது. பீகாரில் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் ஏற்கனவே இங்கும் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று காலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம், காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நேற்று மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர்.

மேஜைகளின் எண்ணிக்கை

அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது அந்த மையங்களில் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரப் பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பணிக்காக செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமா? வாக்கு எண்ணும் அறை சிறிதாக இருந்தால், சமூக இடைவெளிக்காக வாக்கு எண்ணிக்கை நடக்கும் மேஜைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமா? அப்படி மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்கும்பட்சத்தில், ஓட்டு எண்ணிக்கையை தாமதமின்றி முடிக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் மாலையில் 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், 6.45 மணிக்கு நிறைவடைந்தது.

Next Story