குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் முதல்-அமைச்சருக்கு, கமல்ஹாசன் கடிதம்


குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் முதல்-அமைச்சருக்கு, கமல்ஹாசன் கடிதம்
x
தினத்தந்தி 23 April 2021 7:59 PM GMT (Updated: 23 April 2021 7:59 PM GMT)

நடுக்கடலில் கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ‘ஜாபர் ஐ.எப்.பி. ரப்பா' விசைப்படகில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 பேர் என 14 பேர் கடந்த 13-ந்தேதி மங்களூர் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிங்கப்பூரை சேர்ந்த ‘ஏ.பி.எல்.லீ ஹாவ்ரே' தனியார் கப்பல் மோதியதில், விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அலெக்சாண்டர், தாஸ் ஆகிய 2 பேர் உள்பட 6 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் உள்பட 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதம் உள்ள 6 மீனவர்களை காணவில்லை. காலநிலை மோசமாக இருந்தபோதும் கூட அதிகவேகத்தில் சென்ற தனியார் கப்பல்தான் இந்த விபத்துக்கு முழுமையான பொறுப்பு.

நிவாரண உதவி வழங்கவேண்டும்

தமிழக அரசு உடனே இந்த பிரச்சினையில் மீனவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். மாயமான மீனவர்களை கப்பல் படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்கவேண்டும். குளச்சல் பகுதி மீனவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிடைக்கவேண்டிய நிவாரணத்தை உரிய நிறுவனத்திடம் இருந்து பெற்று தர மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்.

கடலில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச்சான்றிதழ் வழங்குவதை அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் உறுதிப்படுத்துவதை நடைமுறைப்படுத்தவேண்டும். விசை படகுகளில் ஏ.ஐ.எஸ். மற்றும் தொலைதூர தொடர்புக்கு ரேடியோ டெலிபோன் வழங்கவேண்டும். இதன்மூலம் பேரிடர் காலங்களில் மீனவர்கள் கடலில் எங்கிருந்தாலும் தொடர்புகொண்டு அவர்களை பாதுகாப்புடன் மீட்க முடியும். தமிழக அரசு தமிழக மீனவர்களின் நலன்களை காக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story