தபால் ஓட்டு எண்ணிக்கையில் புதிய நடைமுறை கூடாது தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேண்டுகோள்


தபால் ஓட்டு எண்ணிக்கையில் புதிய நடைமுறை கூடாது தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 April 2021 8:06 PM GMT (Updated: 23 April 2021 8:06 PM GMT)

தபால் ஓட்டு எண்ணிக்கையில் புதிய நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் நீங்கள் கடிதம் எழுதியுள்ளீர்கள். அதில், தபால் ஓட்டுகளை எண்ணுவதில் சில புதிய அறிவுரைகளை கூறியுள்ளீர்கள்.

அதுதொடர்பாக வேட்பாளர்களுக்கு ஏற்கனவே கையேடு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தபால் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 8.30 மணி வரை நடத்தப்பட வேண்டும். அதற்கு மேலும் தபால் ஓட்டுகள் இருந்தால், அவற்றை விட்டுவிட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்.

குழப்பம்

ஆனால் அனைத்து வகையிலும் தபால் ஓட்டு எண்ணிக்கை, கடைசி சுற்றுக்கு முந்தைய 2 சுற்றுக்குள் (வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள்) முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகே கடைசி மூன்று சுற்று ஓட்டு எண்ணிக்கையை (வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள்) நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் உங்கள் கடிதத்தில், வெற்றி பெற்ற வேட்பாளர் தனக்கு அடுத்ததாக வந்த வேட்பாளரைவிட கூடுதலாக பெற்றுள்ள ஓட்டுகளின் எண்ணிக்கை, தள்ளுபடி செய்யப்பட்ட செல்லாத தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்தால், அந்த செல்லாத தபால் ஓட்டுகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும், அதன் பிறகே முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு, கையேட்டில் உள்ள உத்தரவுக்கு முரணாக காணப்படுகிறது. இந்த முறை 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டிருப்பதால் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கையேட்டின்படி...

தபால் ஓட்டுகளை எண்ணி முடிக்காமல் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டால், அதில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்று முடிவு செய்வதில் தவறிழைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே கையேட்டில் உள்ளபடி தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story