மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை


மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 3 May 2021 10:20 PM GMT (Updated: 3 May 2021 10:20 PM GMT)

மு.க.ஸ்டாலின் உடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்பட அதிகாரிகள் சந்தித்தனர். கொரோனாவை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவாகி, மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேற்று நடந்தது.

இதில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் ‘ரெம்டெசிவிர்’

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிக்சைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சென்னையில் ‘ரெம்டெசிவிர்' போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின், அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்கு, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், ‘‘கொரோனா தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய்ப்பரவலை தடுக்க உதவவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Next Story