நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 86 பேரை கைது செய்த இலங்கை கடற்படை


நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 86 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 4 May 2021 10:00 PM GMT (Updated: 4 May 2021 10:00 PM GMT)

இலங்கை கடற்படையால் ராமேசுவரத்தை சேர்ந்த 86 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக உடனடியாக அவர்களை விடுவித்தனர்.

ராமேசுவரம், 

தமிழகம் முழுவதும், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 61 நாள் இந்த தடை அமலில் இருக்கும்.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் நாட்டு படகுகள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வருகின்றன.

86 மீனவர்கள் கைது

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் இருந்து கடந்த 3-ந்தேதி தென்கடலான மன்னார் வளைக்குடா கடல் பகுதிக்கு அடைக்கலம், ஸ்டீபன், அந்தோணி, திரவியம், பென்சிர் உள்ளிட்ட 11 பேருக்கு சொந்தமான நாட்டுப்படகுகளில் 86 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் படகில் 2 அல்லது 3 நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வரக்கூடியவர்கள்.

இவ்வாறு நாட்டுப் படகுகளில மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் நேற்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடித்ததாக கூறி 11 நாட்டுப்படகையும் சிறைபிடித்ததுடன் படகில் இருந்த 86 மீனவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

கொரோனா பரவலால் விடுவிப்பு

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி இருப்பதால், கொரோனா அச்சம் காரணமாக 86 பேர் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இனி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரிக்கை செய்து படகுடன் மீனவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பி வைத்தனர். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம் மீனவர்கள் 86 பேரும் படகுகளுடன் நேற்று இரவு கரை வந்து சேர்ந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியபோது, “இந்திய கடல் பகுதியில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி எங்களை கைது செய்தனர். பின்னர் கொரோனா அச்சம் காரணமாக விடுவித்தனர்” என்றனர்.

Next Story