பிறர் மனம் புண்படாமல் மதம் சார்ந்த ஊர்வலங்கள் அனைத்து சாலைகள் வழியாக நடத்தப்பட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


பிறர் மனம் புண்படாமல் மதம் சார்ந்த ஊர்வலங்கள் அனைத்து சாலைகள் வழியாக நடத்தப்பட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 May 2021 2:08 AM GMT (Updated: 9 May 2021 2:08 AM GMT)

மாற்று மதத்தினரின் மனம் புண்படாமல், எல்லா மதங்கள் சார்ந்த ஊர்வலங்கள் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்படவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் இஸ்லாமியர்களும், மேற்குப் பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனர். இந்தப் பிரச்சினை 1951-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீசில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், வி.களத்தூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் மாறிமாறி வழக்கு தொடர்ந்தனர்.

சாமி ஊர்வலம்

இது தொடர்பான மேல்முறையீடு வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மக்கள் மதம் சார்ந்தவர்களாகவும், சமுதாயம் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் சாலை எப்படி சமுதாயம் சார்ந்ததாக இருக்க முடியும்? இவ்வழக்கில் இந்தக் கேள்விதான் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாட்கள் கோவில் திருவிழா நடத்தலாம். முதல் நாள் சாமி ஊர்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும். ஊர்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம், அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும். 2-வது நாள் ஊர்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்.

நாட்டுக்கு நல்லதல்ல

3-வது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கக்கூடாது. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனர். மதம் சார்ந்த விழாக்கள் நடத்தப்படும்போது இருதரப்பும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மதரீதியான ஊர்வலங்கள் நடத்தப்படும்போது எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. மத சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல.

இந்தியா ஒரு மத நல்லிணக்க நாடு. காலம் காலமாக நடந்துவரும் விழா சம்பிராதயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, கலவரத்தையும், மத ரீதியான சண்டைகளையும் ஏற்படுத்தி உயிர்ச்சேதம், சொத்துக்கள் சேதம் ஏற்பட்டுவிடும். மத நல்லிணக்க நாடு என்ற கோட்பாடு அழிந்துவிடும்.

கட்டுப்பாடுகள் இல்லை

அதனால்தான் பேரழிவு மேலாண்மை சட்டத்தின்படி, சாலைகள், தெருக்கள் அனைத்தும் மதம் சார்ந்தவை அல்ல. அனைத்து மக்களும் பாரபட்சமின்றி, சாதி மதபேதமின்றி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மதம் சார்ந்த ஊர்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்படவேண்டும்.

மற்ற மதத்தினர் உள்ளனர், வியாபாரங்கள் செய்துவருகின்றனர் என்பதற்காக மத ஊர்வலங்கள் தடுக்கப்படக்கூடாது.

மத ஊர்வலங்களில் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் கடமை.

மத உணர்வு

எல்லா மதம் சார்ந்த ஊர்வலங்களும் மற்ற மதத்தினரின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் நடத்தப்படக்கூடாது. ஒரு வழிபாட்டுத் தலம் வேறு ஒரு மதத்தினருக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது என்பதற்காக மதச் சடங்குகளுக்கு அனுமதி மறுக்கப்படக்கூடாது.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் மத ஊர்வலங்கள் மீது மற்ற மதத்தினர் உரிமை கொண்டாடக்கூடாது. மத ஊர்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

தள்ளுபடி

இந்த வழக்கில் இருதரப்பினர் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும். சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story