கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை வகுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்


கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை வகுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 May 2021 12:18 AM GMT (Updated: 11 May 2021 12:18 AM GMT)

தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை கையாள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை, 

கிண்டியில் உள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்த பெருந்தொற்று காலத்தில் அதை எதிர்த்து நாம் மேற்கொள்ளும் யுத்தத்தில், தேவையான உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் தொழில் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு அரசிற்கு உதவி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவி உள்பட அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதி கூறினார்.

பேரிடர் காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பெருந்தொற்று பரவலினை தடுக்கும் பொருட்டு அரசின் பெருந்தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு தொழில் நிறுவனத்திற்கும் அறிவுறுத்தி அதனை தவறாமல் கடைப்பிடிக்கவும், பெருந்தொற்று பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.

புதிய உத்திகள்

மேலும் இத்தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் வகையில் தொழிற்பேட்டைகள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து பணியாளர்களையும் பெருந்தொற்றில் இருந்து காக்க வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகள் வகுத்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ செயல்படுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆணையர்-தொழில் வணிக இயக்குனர் சிவராசு வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரா.கஜலட்சுமி மற்றும் இ.டி.ஐ.ஐ, நிறுவனத்தின் இயக்குனர் ராசாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story