கட்சி அலுவலகத்தில் திரண்ட அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது வழக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் போலீசார் நடவடிக்கை


கட்சி அலுவலகத்தில் திரண்ட அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது வழக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2021 3:50 AM GMT (Updated: 11 May 2021 3:50 AM GMT)

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திரண்ட கட்சி தொண்டர்கள் 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்ததால் போலீசாரிடம் அனுமதி பெற்று கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் யார் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்தனர்.

3 பிரிவுகளில் வழக்கு

ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி கூட்டமாக ஒரே இடத்தில் ஒன்று கூடக்கூடாது என்பதால், அ.தி.மு.க.வினர் மீது ராயப்பேட்டை போலீசில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புகார் அளித்தனர்.

அதன்பேரில் அ.தி.மு.க. கட்சி அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்பட கட்சி அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது ஊரடங்கு சட்டத்தை மீறுதல் உள்பட 3 பிரிவின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

Next Story