அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காரசார விவாதம் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு


அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காரசார விவாதம் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
x
தினத்தந்தி 11 May 2021 4:11 AM GMT (Updated: 11 May 2021 4:11 AM GMT)

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காரசார விவாதத்துக்கு இடையே சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை அ.தி.மு.க. பெற்றது. யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது.

இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந்தேதி அன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நேரடி மோதல்

அன்றைய தினம் 3 மணி நேரத்துக்கு மேலாக நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி அலுவலகத்துக்கு வெளியே 2 பேரின் ஆதரவாளர்களும் மாறி, மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டும், போட்டி போட்டு கோஷமிட்டும் பரபரப்பை எகிற வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் இருவரும் நேரடியாக மோதிக் கொண்டனர்.

அன்றைய தினம் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

மீண்டும் கூட்டம்

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், போலீசார் அனுமதி பெற்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று காலை 9.40 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

ப.தனபால் பெயரை...

கூட்டம் தொடங்கியவுடன் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டவன் இல்லை. முதல்-அமைச்சர் பதவியையே கேட்கவில்லை. இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் கேட்கவில்லை. அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக மூத்த தலைவரான முன்னாள் சபாநாயகர் ப.தனபாலை நான் முன்மொழிகிறேன்’ என்று கூறினார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் எதிர்ப்பு குரல் கிளம்பியது.

கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்களான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் சேர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், தளவாய் சுந்தரம், ராஜன் செல்லப்பா உள்பட எம்.எல்.ஏ.க்களும் கைகளை மேலே உயர்த்தி குரல் எழுப்பினர்.

திறம்பட ஆட்சி நடத்தினார்

அப்போது அவர்கள், ‘ எடப்பாடி பழனிசாமி பல்வேறு சோதனைகளுக்கு இடையே திறம்பட கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தினார். எனவே அவரைத்தான் சட்டசபை எதிர்க் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்‘ என்று வலியுறுத்தினர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ்பாண்டியன், ‘ கட்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் நிறைய தியாகங்களை செய்து இருக்கிறார். முதல்-அமைச்சர் பதவியையே விட்டுக் கொடுத்திருக்கிறார். எனவே அவருக்கு தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்தது.

எடப்பாடி பழனிசாமி தேர்வு

கடைசியில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே துணை தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர், அந்த பதவி தனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனவே நேற்றைய கூட்டத்தில் துணை தலைவர், கொறடா, செயலாளர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சட்டசபை செயலாளரிடம் கடிதம்

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மதியம் 1 மணியளவில் நிறைவடைந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்தில், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை உடனடியாக சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற செயலாளர் சீனிவாசனை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ப.தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்பட முன்னாள் அமைச்சர்கள் ஒன்றாக வழங்கினர்.

நேரில் சந்தித்து வாழ்த்து

இந்த நிலையில் நேற்று மாலை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Next Story