140 படுக்கை வசதிகளுடன் சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்


140 படுக்கை வசதிகளுடன் சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
x

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 140 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட சித்தா, அலோபதி கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை, 

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரியில் 70 படுக்கை வசதிகளுடன் சித்தா சிறப்பு கொரோனா மையமும், 70 படுக்கை வசதிகளுடன் கூடிய அலோபதி சிறப்பு கொரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை உயர் அலுவலர்கள், ஏ.எம். ஜெயின் கல்லூரியின் இணை செயலாளர் எம். சாந்திமுல்நாஹர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

14 சித்தா சிறப்பு மையங்கள்

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படை தத்துவத்தை கொண்ட தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவ சிகிச்சையால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோயாளிகள் விரைவாக குணமடைந்தனர். தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், சித்த மருத்துவ சிகிச்சையின் பயன் இத்தருணத்திலும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக 14 சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூலிகை நீராவி சிகிச்சை

இச்சிறப்பு மையத்தில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் திறந்த வெளியில் ஒருங்கிணைந்த வகையில் சித்தர் யோகா, திருமூலர் பிராணாயாமம், வர்ம சிகிச்சை, சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், அவர்களுக்கு சத்தான உணவுடன் காலை சீரண குடிநீர், மாலையில் கரிசாலை பால் மற்றும் இரவில் சுக்கு கஞ்சி வழங்கப்படும். அத்துடன் இச்சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு ‘ஆரோக்கியம்’ என்ற மருந்து பெட்டகம் வழங்கப்படும்.

இம்மருந்து பெட்டகத்தில் உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற சித்த மருந்துகள் இடம்பெற்று இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story