மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்: சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி இன்று பதவி ஏற்பு 2 பேரும் போட்டியின்றி தேர்வு


மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்: சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி இன்று பதவி ஏற்பு 2 பேரும் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 12 May 2021 3:58 AM GMT (Updated: 12 May 2021 3:58 AM GMT)

போட்டியின்றி தேர்வான அப்பாவு சபாநாயகராகவும், பிச்சாண்டி துணை சபாநாயகராகவும் சட்டசபையில் இன்று பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.

சென்னை, 

நடந்த முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைந்துள்ள சட்டசபையில் நேற்று நடைபெற்றது.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு 11-ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 2 பதவிக்கும் தி.மு.க. தனது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியது. அதன்படி, சபாநாயகர் பதவிக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ. மு.அப்பாவுவையும், துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டியையும் தி.மு.க. அறிவித்தது.

அமைச்சர்கள் வரவேற்பு

இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்திற்கு நேற்று காலை வந்தார். அவரை அங்கிருந்த அமைச்சர்கள், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கு.பிச்சாண்டியின் அறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல்

சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலையில் தொடங்குவதற்கு முன்பு, சட்டசபை செயலாளர் கி.சீனிவாசனின் அறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் அவை முன்னவர் துரைமுருகன், மு.அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோர் வந்தனர்.

சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடும் மு.அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் கு.பிச்சாண்டி ஆகியோரது வேட்பு மனுக்கள், சட்டசபை செயலாளரிடம் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். துரைமுருகன் அவற்றை வழிமொழிந்தார்.

போட்டியின்றி தேர்வு

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு நேற்று பகல் 12 மணிவரை வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதன்படி, இந்தப் பதவிகளுக்கு போட்டி நிலவவில்லை. எனவே சபாநாயகராக மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டசபை கூடுகிறது. அப்போது தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி, சபாநாயகராக மு.அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பார்.

பதவி ஏற்பு

அதன் பின்னர் அந்த இருக்கையில் இருந்து கு.பிச்சாண்டி இறங்கிவிடுவார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மு.அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமரச் செய்வார்கள். அப்போது அவை முன்னவரும் உடனிருப்பார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் பலரும் சபாநாயகர் மு.அப்பாவுவை வாழ்த்தி பேசுவார்கள். அவர்களின் வாழ்த்திற்கு மு.அப்பாவு ஏற்புரை ஆற்றுவார். சபாநாயகர் ஆனதும் மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியை அறிவிப்பார்.

Next Story