தமிழகத்தில் அமலுக்கு வந்தது இ-பதிவு நடைமுறை: போலீசார் தீவிர கண்காணிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 May 2021 5:39 AM GMT (Updated: 17 May 2021 5:39 AM GMT)

தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்ததுள்ளநிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு' முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவில், 'திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகும். இது இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டிருந்தது.

எனவே தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறை கொண்டு வரப்பட்டது. ‘இ-பாஸ்’ வாங்க சிரமமான நிலை இருந்தது. ஆனால் இடைத்தரகர்கள் தலையீட்டால், ‘இ-பாஸ்’ நடைமுறை குளறுபடியானது. இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். எனவே தற்போது ‘இ-பதிவு’ என்ற எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'இ-பதிவு' செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையதளத்துக்குள் நுழைய வேண்டும். அதில் தங்களுடைய செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். அருகில் ‘கேப்ட்சா' எண் இருக்கும். அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் ஓ.டி.பி. எண் வரும். இந்த எண்ணை பதிவு செய்தால் ‘இ-பதிவு' காலம் திறக்கும். அதில் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், வாகன எண், எங்கிருந்து எங்கே பயணம், எதற்காக பயணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். 

பயணம் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (உதாரணம், திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்றால் திருமண பத்திரிகையை அளிக்க வேண்டும்). ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். அதன்பின்னர் பயணம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும்.

ரெயில் மூலம் வரும் பயணிகள் ரெயில் டிக்கெட் நகல், ரெயில் எண், பெட்டி, புறப்படும்- வந்து சேரும் இடம் மற்றும் 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். ரெயில் நிலையம் வருவதற்கு மட்டுமே இந்த பாஸ் செல்லுபடியாகும் என்றும், ரெயில் நிலையத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டு செல்லும் இடங்களுக்கு வாகனத்தின் விவரங்களை குறிப்பிட்டு இந்த பாசை புதுப்பிக்க வேண்டும் என்றும் இ-பதிவு இணையதளத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்களில் செல்வோர் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் இ-பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சோதனை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. இ-பதிவு செய்யப்படாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story