பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும்; டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும்; டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 May 2021 4:19 PM GMT (Updated: 17 May 2021 4:19 PM GMT)

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும், இனி அந்த பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாளுவார் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும்.

பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி மட்டுமின்றி மெட்ரிக் பள்ளி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், முறைசாரா கல்வி இயக்குனர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் அகற்றப்பட்டு அவர்கள் அனைவரும் கையாண்டு வந்த பொறுப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செய்யப்பட்டால் அதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது. பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியில் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இதுவரை இருந்த நிலையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story