ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 22 பேர் சாவு


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 22 பேர் சாவு
x
தினத்தந்தி 19 May 2021 3:44 AM GMT (Updated: 19 May 2021 3:44 AM GMT)

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சுமார் 2,500 பேர் கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, கோவிட் கேர் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

இந்தநிலையில் கொரோனா அறிகுறியுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள், மூச்சு திணறல் அதிகமாகி அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 5 பெண்கள், 17 ஆண்கள் என மொத்தம் 22 பேர், நோயின் தாக்கம் அதிகமாகி கொரோனா வார்டில் இறந்துள்ளனர். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு, அதில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் கொரோனா அறிகுறியுடன் வந்து சேர்ந்தவர்கள் என ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 22 பேர் கொரோனா அறிகுறியுடன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நோய் தொற்றின் அறிகுறி தீவிரமான பின்னர் சுயமாக மருந்து எடுத்து கொண்டு, பின்னர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று, அங்கும் சிகிச்சை பெற முடியாமல் தாமதமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். இதுவே கொரோனா வார்டில் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story