தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பது ஏன்? மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பது ஏன்? மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 May 2021 7:46 PM GMT (Updated: 20 May 2021 7:46 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருந்துகள், தடுப்பூசிகள் ஒதுக்கீடு ஏன் குறைவாக வழங்கப்படுகின்றன? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு தரப்பில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே, ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் ஒதுக்கப்படுகின்றன என்று தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பரவல் அதிகம்
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘ஆக்சிஜன் தேவை தற்போது சமாளிக்கக்கூடிய வகையில் உள்ளது. கொரோனா சிகிச்சை ஆங்கில மருத்துவம் மட்டும் இல்லாமல் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் வழங்கப்படுகிறது.சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவல் அதிகரித்துள்ளது. அதுவும் விரைவில் குறைக்கப்பட்டுவிடும். 20 ஆயிரம் கூடுதல் படுக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

ஆக்சிஜன் உற்பத்தி
மேலும் அவர், ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் யூனிட்டில் உள்ள பழுது நீக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 6.7 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோயை சமாளிக்கக்கூடிய நிலை உள்ளது’’ என்றார்.

நீதிமன்றங்களில் சிகிச்சை மையம்
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, ‘தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். சென்னை ஐகோர்ட்டு அருகே உள்ள சட்டக்கல்லூரி கட்டிடங்களிலும் கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்கலாம்’’ என்று கூறினர்.அப்போது, ஒரு வக்கீல் ஆஜராகி, ‘கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 4 நாட்கள் வரை ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பரிசோதனை செய்தவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்கள் அதிக நோய் தொற்று பரவலை செய்பவர்களாகி விடுவார்கள். எனவே, பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

விளக்கம் வேண்டும்

இதையடுத்து நீதிபதிகள் பிறத்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மருந்து மற்றும் தடுப்பூசி ஆகியவை எதிர்காலத்திற்கான திட்டத்தை குறிப்பிடவில்லை. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமமான அளவில் மருந்து மற்றும் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஒதுக்கீடுகள் குறைவாக உள்ளது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பரிசீலிக்க வேண்டும்

கொரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவுகளை தெரிவிக்க 4 நாட்கள் வரை ஆவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. பரிசோதனைமுடிவுகள் எவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முடியும்.பயணிகள் வாகனங்களை ஆக்சிஜன் படுக்கைகள் கொண்டதாக மாற்றும்போது, டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தக்கூடாது என்ற கோரிக்கையையும் அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

கொள்முதல்

கொரோனா 2-வது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் செயல்பட வேண்டும். மத்திய அரசு ஒதுக்கீடு இல்லாமல் தனியாரிடமிருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.விசாரணையை வருகிற24-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Next Story