கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை


கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 May 2021 5:37 PM GMT (Updated: 21 May 2021 5:37 PM GMT)

கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு்ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கொரோனா தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும் இது கட்டுப்படுத்தக்கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பொது சுகாதார திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் தன்மையின் நிலையைக் கருத்தில் கொண்டு தொற்று நோய்க்கான சிகிச்சைக்கு தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலினை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகள் அரசாணை எண்.231 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை நாள். 07.05.2021 மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டண நிர்ணயம்
கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூ.800-லிருந்து ரூ.550 ஆகவும், குழு மாதிரிகளுக்கு ரூ.600-லிருந்து ரூ.400 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாதவர்கள் தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்க்கு கட்டணம் ரூ.1,200-லிருந்து ரூ.900 ஆக நிர்ணயம் 
செய்யப்படுகிறது. மேலும் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக ரூ.300-ம் கட்டணம் (மாற்றமின்றி) நிர்ணயம் செய்யப்படுகிறது.

புகார் தெரிவிக்கலாம்
தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து பொதுமக்கள் 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 மணி நேரமும் புகார்களை அளிக்கலாம். ‘புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story