ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை


ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 May 2021 8:54 PM GMT (Updated: 26 May 2021 8:54 PM GMT)

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை,

‘ஆன்லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) கைது செய்யப்பட்டார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜகோபாலன், பள்ளி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பல முறை மாணவிகளும், பெற்றோரும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது.

ராஜகோபாலன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் தயக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராஜகோபாலன் விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க சென்றபோது மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமும், துணை கமிஷனரிடம் பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அடுக்கடுக்கான கேள்விகள்

இதையடுத்து பத்ம சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேற்று முன்தினம் சென்னை அசோக்நகர் போலீஸ்நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் அந்த பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு நேற்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, தியாகராயர்நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் ஆகிய 2 பேரும் விசாரணை நடத்தினர்.

2-வது நாளாக அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. இந்த விசாரணையின்போது, ‘ஆசிரியர் ராஜகோபாலன் மீது ஏற்கனவே எத்தனை மாணவிகள், பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்?. அந்த புகாரின் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த புகார்கள் குறித்து போலீசார் கவனத்துக்கு கொண்டு வராதது ஏன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் எழுப்பினர்.

அதற்கு பெரும்பாலான கேள்விகளுக்கு பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனின் பதில் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்று கூறி கீதா கோவிந்தராஜனை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story