வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு வேண்டுகோள்


வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Jun 2021 8:07 PM GMT (Updated: 4 Jun 2021 8:07 PM GMT)

ஊரடங்கு காலத்தில் வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்கக் கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த தொகையை அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். தெரு விலங்குகளுக்கு உணவு அளிக்கும் பணியை மேற்கொள்ள ஒரு குழுவையும் நீதிபதிகள் அமைத்தனர்.

நிதி போதாது

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு நியமித்த குழு சார்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் சில மாவட்டங்களுக்கு ரூ.9 ஆயிரம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை. இந்த விலங்குகளுக்கு உணவு அளிக்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் உதவி

‘தமிழக கவர்னரும், தமிழக அரசும் புனிதமான இந்த காரியத்துக்காக சரியான நேரத்தில் நிதியை ஒதுக்கியுள்ளது மனநிறைவாக உள்ளது. அதுவும் ஐகோர்ட்டு கோரிக்கை எதுவும் விடுக்காமலே, அரசு நிதி ஒதுக்குவதற்கு முன்பே, கவர்னர் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

கவர்னர் வழங்கிய இந்த நிதி, மாநகரத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்கும் ஆரம்பகட்ட பணியை மேற்கொள்ள உதவியாக இருந்துள்ளது.

பண உதவி

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் வாயில்லா பிராணிகள் பசியால் வாடுவதை தடுக்க தனியார் நிறுவனங்கள் பணமாகவோ அல்லது பொருளாகவோ உதவி செய்ய முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வழக்கை 9-ந் தேதிக்குத் தள்ளிவைக்கிறோம்.’

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story