ஊரடங்கில் மக்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


ஊரடங்கில் மக்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2021 6:40 AM GMT (Updated: 9 Jun 2021 6:40 AM GMT)

ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் பார்க்கும் போது ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டு வழக்கமான செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர், கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர் என்றும் தற்போது கடுமை காட்ட வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதால் மக்கள் வெளியில் வருவது அதிகரித்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிக அளவில் வெளியே சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைப்பதற்காகத் தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை மக்கள் உணரும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story