சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Jun 2021 3:43 PM GMT (Updated: 10 Jun 2021 3:43 PM GMT)

சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 21,46,680 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள நபர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இத்துடன், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில், தற்போதைய தடுப்பூசி இருப்பினைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட தடுப்பூசி முகாம்களின் வாயிலாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 15,59,783 நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5,86,897 நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 09.06.2021 வரை 21,46,680 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்திய சதவீதம் 66.31 ஆகும்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை வியாபாரிகளுக்கு 8,239 கோவிட் தடுப்பூசிகளும், காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் வியாபாரிகளுக்கு 2,143 தடுப்பூசிகளும், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 89 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகங்களில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் வியாபாரிகளுக்குத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்” என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story