வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி


வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Jun 2021 8:10 PM GMT (Updated: 20 Jun 2021 8:10 PM GMT)

வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி 75 மையங்களில் சிறப்பு ஏற்பாடு.

சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

வெளிநாடு செல்பவர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்படுகிறது. ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முதல் தவணைக்கும், 2-வது தவணைக்கும் இடைவெளி 4 வாரத்தில் இருந்து 12 வாரங்களாக (84 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடு செல்பவர்கள் 2-வது தவணை தடுப்பூசிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது தவணையை 4 வாரத்தில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “கல்வி, வேலை, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள், ஒலிம்பிக் போட்டியை பார்வையிட வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணையை 28 நாட்களில் போட்டுக் கொள்ளலாம்.

இவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சென்னையில் 19 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 84 நாட்கள் இடைவெளியில் தான் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி போடப்படும்” என்றார்.

Next Story