சென்னையில் காற்று, நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னையில் காற்று, நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 20 Jun 2021 10:13 PM GMT (Updated: 20 Jun 2021 10:13 PM GMT)

சென்னையில் காற்று, நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

சென்னை,

சென்னை மாநகர பகுதியில் காற்று, நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்து உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதைத் தடுப்பது தொடர்பாக மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.அதன்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தேசிய சுற்றுப்புற காற்றுத்தர கண்காணிப்பு முறை மூலமாக காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்த மாசை அளவிடும் முறை இல்லை. இந்த கண்காணிப்பு முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று கூறப்பட்டிருந்தது.அதைத்தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தற்போது அமலில் உள்ள காற்றுத்தர கண்காணிப்பு முறை 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போது பல்வேறு வகையான மாசுகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு ஏற்றவாறு தேசிய காற்றுத்தர கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். சென்னையில் காற்று மற்றும் நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானிகள், அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மைய விஞ்ஞானி ஆகியோர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.இந்த குழு, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தின் அருகே உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்தும், அப்பகுதி மற்றும் மாநகரின் பிற பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணித்தும், அவற்றில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story