இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்: தமிழகத்தை உலுக்கிய தந்தை-மகன் கொலை சம்பவம்


இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்: தமிழகத்தை உலுக்கிய தந்தை-மகன் கொலை சம்பவம்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:12 PM GMT (Updated: 21 Jun 2021 8:12 PM GMT)

தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19-ந்தேதி கொரோனா ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்திருந்ததாக, சாத்தான்குளம் போலீசாரால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு இரவு முழுவதும் தாக்கப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் இருவரும் 22-ந்தேதி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கொந்தளித்த பொதுமக்கள், வியாபாரிகள் சாத்தான்குளத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தந்தை-மகன் கொலைக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் ஐ.நா. சபையிலும் எதிரொலித்தது.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை உள்ளிட்ட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்., கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை இறந்ததால், மற்ற 9 போலீசாரின் மீதான விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஜெயராஜ்-பென்னிக்சை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசும், பல்வேறு கட்சியினரும் ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினாலும், இந்த சம்பவம் என்றும் மக்களின் மனதில் ஆறாத வடுவாகவே உள்ளது.

உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்சின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துகின்றனர்.

Next Story