தமிழக சட்டசபை கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு


தமிழக சட்டசபை கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 9:18 PM GMT (Updated: 21 Jun 2021 9:18 PM GMT)

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை,

16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியுள்ளது. கவர்னர் உரை முடிந்ததும், முதல்-அமைச்சர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினராக உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு இன்றும், நாளையும் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பார்கள். இந்த விவாதம் முடிந்ததும் 24-ந் தேதியன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் வைத்த கருத்திற்கு முதல்-அமைச்சர் பதிலளித்து உரையாற்றுவார்.

இரங்கல் தீர்மானம்

இன்று காலை சட்டசபை தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 11 பேரின் மறைவு குறித்த இரங்கல் குறிப்பும், 4 முக்கிய பிரபலங்களான மறைந்த நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்வியாளர் கி.துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மற்றும் முதலாவது சட்டமன்ற பேரவையின் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். இன்றும், நாளையும் விவாதத்தில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று பேசுவார்கள்.

கேள்வி நேரம் இல்லை

இந்த கூட்டத்தொடரில் கேள்வி பதில் நிகழ்ச்சியை பொறுத்த அளவில், பல கேள்விகள் இன்னும் வரவில்லை. வந்த சில கேள்விகளை அனுப்பி, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் இருந்து பதில் வரவில்லை. ஏனென்றால் கொரோனா பரவல் காலகட்டமாக இருப்பதால் ஊரடங்கு போடப்பட்டு பல அலுவலகங்கள் இயங்கவில்லை. எனவே இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது.

ஒரு சில கவன ஈர்ப்பு தீர்மானங்கள் வந்துள்ளன. அவற்றுக்கும் பதில் வரவில்லை என்பதால் கவன ஈர்ப்பு தீர்மானமும் இருக்காது. ஒன்றிரண்டு சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளது. அவை அந்தந்த காலகட்டத்தில் நிறைவேற்றப்படும். காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கும். அதிகபட்சம் எத்தனை பேர் பேசுவதற்கு வாய்ப்பளிக்க முடியுமோ, அத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story