கூட்டாட்சி தத்துவமே அடங்கியிருக்கிறது: ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து மிரள தேவையில்லை பா.ஜனதாவுக்கு, மு.க.ஸ்டாலின் பதில்


கூட்டாட்சி தத்துவமே அடங்கியிருக்கிறது: ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து மிரள தேவையில்லை பா.ஜனதாவுக்கு, மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 23 Jun 2021 11:50 PM GMT (Updated: 23 Jun 2021 11:50 PM GMT)

ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை என்று பா.ஜ.க. உறுப்பினருக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

உச்சத்தில் சூரியன்...

நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.) :- கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தொடங்கி வைத்து பேசிய தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன், எல்லோரும் ஜாதகம், ஜோசியம் பார்த்தார்கள். ராகு, கேது அதையெல்லாம் தாண்டி எனது தலைவருக்கு சூரியன் உச்சத்தில் உள்ளது என்று கூறினார். நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதெல்லாம் தெரியாது. மன்னர்கள் போருக்கு போகும் போது ஜோசியம் பார்த்துவிட்டு தான் செல்வார்கள். நீங்கள் நாள் பார்த்தீர்களோ, நட்சத்திரம் பார்த்தீர்களோ எனக்கு தெரியாது. ஆனால் சட்டசபையை அமாவாசையில்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள். வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறோம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிருக லக்கணத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்தார். 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற போதும் மிருகலக்கணம் தான். சூரியன் உச்சத்தில் இருந்தது. நான் ஒன்றும் ஜோசியக்காரன் கிடையாது. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

சபாநாயகர் அப்பாவு: இன்றைக்கும் சூரியன் உச்சத்தில்தான் இருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சை தொடங்குங்கள். தொகுதி பிரச்சினையை பற்றி பேசுங்கள்.

பொருள் குற்றம்

நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.) : எல்லோரும் இப்போது ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தமிழக அரசு பயன்படுத்துவது ஏன்?. ஆங்கிலத்தில் ‘ப்ளீஸ் டேக் யூவர் சீட்' என்றால் சேரை தூக்கி கொண்டு நிற்க முடியாது. எந்த இடத்தில் எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்று தெரியவேண்டும்.

எதற்காக ஒன்றிய அரசு என்று சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. சொல்லில் குற்றம் இல்லை. ஆனால் பொருளில் குற்றம் இருக்கிறது. எந்த எண்ணத்தோடு இது சொல்லப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். எந்த உள்நோக்கத்தோடு ஒன்றிய அரசு என்று சொல்லப்படுகிறது.

(அப்போது குறுக்கீட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்)

மு.க.ஸ்டாலின் விளக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக்குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்’’ என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.

‘ஒன்றியம்' என்பது தவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் அண்ணா சொல்லாததை, கருணாநிதி சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மிரள தேவையில்லை

தி.மு.க.வுடைய 1957-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், அண்ணா பேசுகிறபோது, குறிப்பிட்டார்கள் - “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே - அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது’’ என்றுதான் பேசியிருக்கிறார்.

‘சமஷ்டி’ என்ற வார்த்தையை ம.பொ.சி. பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதியிருக்கிறார்கள். எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் - பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்.

கோவை புறக்கணிப்பா?

நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா):- முதல்-அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் நடந்து கொண்ட விதம் பாராட்டுதலுக்குரியது. எல்லாருக்குமான அரசு என்று சொன்னாலும், மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டம் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக வருமானம் தரக்கூடிய மாவட்டம். ஒருவேளை அ.தி.மு.க. கூட்டணி அதிகமாக வெற்றி பெற்றதால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதோ?.

(அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கீட்டு பேசினார்)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- கோவை மாவட்டம் எந்தெந்த வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கு நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். கோவையை எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.

ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்

தொடக்கத்தில் இருந்தே சொன்னேன், தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது, ஆட்சி பொறுப்பேற்கும் அளவுக்கு மெஜாரிட்டி வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் நான் பத்திரிகையாளர்களிடம், ‘வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும். வாக்களிக்காதவர்கள் வருத்தப்பட வேண்டும்’ என்று சொன்னேன். அப்படி என்பதுதான் எங்கள் ஆட்சியின் கொள்கை. தயவு செய்து தவறான கருத்தை நீங்கள் பதிவு செய்ய வேண்டாம். கோவையை எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் புறக்கணிக்கமாட்டோம். இன்னும் அங்குள்ள மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அங்கு இன்னும் அதிகமான அளவுக்கு பணிகளை செய்வோம்.

எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.):- முதல்-அமைச்சர் கோவையை புறக்கணிக்கிறார் என்ற கருத்து பரவலாக இருந்தது. தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 110-விதியின் கீழ் கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அறிவித்தார். எனவே இன்றைய முதல்-அமைச்சர் அந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோவை மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அதை போல, கோவை மாவட்டத்துக்கு எய்ம்ஸ் கோரிக்கையை பிரதமரிடம் கேட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.) :-திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரூ.250 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு இப்போது அந்த பணிகள் மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story