‘நியூட்ரினோ திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்'; மு.க.ஸ்டாலினுக்கு விஞ்ஞானிகள் கடிதம்


‘நியூட்ரினோ திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்; மு.க.ஸ்டாலினுக்கு விஞ்ஞானிகள் கடிதம்
x
தினத்தந்தி 27 Jun 2021 6:07 PM GMT (Updated: 27 Jun 2021 6:07 PM GMT)

நியூட்ரினோ திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்கவேண்டும் என்றும், எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு பெற்றவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை ஸ்டாலின் முன்வைத்தார். அதில், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ தொடர்பான திட்டங்களை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.

ஸ்டாலினுக்கு கடிதம்
இந்தநிலையில் நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவாக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு பெற்றவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் அடங்கிய 75-க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்களான கனடா குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்தர் மெக்டோனால்ட், ஜப்பான் கமியோகா ஆய்வு கூடத்தைச் சேர்ந்த பேராசிரியர் கஜிதா, கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஜி.பாஸ்கரன், டி.ஆர்.கோவிந்தராஜன், பத்மபூஷண் விருது பெற்ற பேராசிரியர் அசோகே சென், பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர்கள் அஜய் சூட், டி.வி.ராமகிருஷ்ணன், ரோகிணி கோட்பாலே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் சுபீர் சர்கார், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. டி.கே.ரெங்கராஜன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு ஸ்டாலினுக்கு அனுப்பிய அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

வர்த்தகரீதியிலானது அல்ல
இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு தொடங்கின. இந்த செயல்திட்டம் முழுக்க முழுக்க கல்விசார்ந்த நிகழ்வுகளுக்காக மட்டுமே. வர்த்தக ரீதியிலானது அல்ல. 
இயற்கையை ஆழமாக புரிந்துகொள்வதற்காக இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த திட்டம். கோலார் தங்க வயல்களில் நியூட்ரினோ இயற்பியல் பற்றி ஆய்வு செய்யும் வசதி இந்தியாவில் இருந்தது. கோலார் தங்க வயல்கள் மூடப்பட்ட உடன், அந்த வசதியும் கைவிடப்பட்டது. அதன் பின்பு விஞ்ஞானிகள், அரசு பிரதிநிதிகள், சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சுற்றுச்சூழல் ஒப்புதல் அளித்தது. இதற்கு நீதித்துறையிடம் இருந்து எந்தவித தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை
நியூட்ரினோ கதிர்வீச்சு மக்களின் உடல்நிலையைப் பாதிக்கும், சுரங்கப்பாதை அமைப்பது 30 முதல் 35 கி.மீ. தொலைவில் உள்ள அணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அணுக்கழிவுகள் அந்த மையத்தில் சேமித்து வைக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில குழுவினர் பொதுமக்களிடம் தேவையில்லாத பீதியை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மையான விளக்கத்தை இந்திய நியூட்ரினோ ஆய்வு கூடம் தனது இணையதளத்தில் பல்வேறு மொழிகளில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைப்பது, அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்காக எடுக்கப்படும் முக்கியமான முயற்சியாகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆய்வு கூடம் அமைய உள்ள இடத்தில் இருந்து தொலைவில் உள்ள அணைக்கோ அல்லது அணையின் நீர்மட்டத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்
தொழில்நுட்பரீதியில் கூறவேண்டும் என்றால், தொலைநோக்கி போன்றதுதான், பொட்டிப்புரம் அருகே உள்ள மலைப்பகுதியின் கீழே கட்டப்பட உள்ளது. கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகம், ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி போன்று நியூட்ரினோ ஆய்வு கூடமும் புகழ்மிக்க அறிவியல் பங்களிப்புகளை கொடுக்கும். தமிழகம் இந்த ஆய்வு கூடம் அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடவசதிகளை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை தாமதப்படுத்துவது நமது பிராந்தியத்தில் உள்ள இளம் ஆராய்ச்சி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீணாகிவிட்டது. இந்தநிலையில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமான ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இந்த திட்டத்தை உடனடியாக அனுமதிக்க வேண்டும். 

நியூட்ரினோ ஆய்வு கூடத்துக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் பயன்களை பல இதழ்களில் குறிப்பிட்டுள்ளார். எனவே அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் தமிழகத்துக்கு 
புகழ் தேடித்தரும் வகையிலான இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பதோடு, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story