அ.தி.மு.க. ஆட்சியின்போது மூடிக்கிடந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன்


அ.தி.மு.க. ஆட்சியின்போது மூடிக்கிடந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 2 July 2021 11:52 PM GMT (Updated: 2 July 2021 11:52 PM GMT)

அ.தி.மு.க ஆட்சியின்போது செங்கல்பட்டில் மூடிக்கிடந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

விழிப்புணர்வு வாகனம்

சென்னை திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டியது அரசின் கடமை. அதன்படி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துகிற வகையில் பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 10 வாகனங்கள் மூலம் மார்க்கெட் மற்றும் குடிசை பகுதிகளில் 
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் நீலகிரி, அரியலூர் மாவட்டங்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் முதன்மை மாவட்டங்களாக உருவாக்க அதிகாரிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

எச்.எல்.எல். நிறுவனம்
தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தம் கோருவது, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் திறப்பது உள்ளிட்டவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அவர்களுக்கு, செங்கல்பட்டில் எச்.எல்.எல். நிறுவனம் எங்கு இருக்கிறது, என்று பன்னீர்செல்வத்துக்கு தெரியுமா?. அதை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?.அதேபோல் குன்னூரில் இருக்கிற பாஸ்டியர் நிறுவனத்தை அ.தி.மு.க. ஆட்சியில் யாராவது சென்று பார்த்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரிந்திருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை திறந்திருப்பார்கள். அ.தி.மு.க அரசைவிட அதிகமாகவே, தி.மு.க அரசு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் திறப்பது தொடர்பாக மத்திய அரசு யோசித்து வருகிறது.

தொற்று அதிகரிக்கிறது
விரைவில் நல்ல பதில் வரும். அதுவரை பன்னீர்செல்வம் காத்திருந்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 10 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 7 மாவட்டங்களில் 1 அல்லது 2 என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. எனவே அது சம்பந்தமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மாவட்ட கலெக்டர்களிடம் பேசி உள்ளார். சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மாவட்டங்களில் தளர்வுகளை குறித்து, என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை 
நடத்தி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 1.48 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 8 லட்சம் அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story